1) ஜோதிராவ் ஃபுலே



மகாத்மா என்ற பட்டத்தை அடைந்த முதல் மனிதர் இவர் தான். இவருக்கு பின்னர் தான் காந்தியடிகளுக்கு மகாத்மா பட்டமே கிடைத்தது. காந்தியடிகளால் எனது வழிகாட்டி/மானசீக குரு என்று புகழப்பட்டவர். தனது சேவையினாலும் தன்னமற்ற தொண்டுகளாலும் தாழ்த்தப்பட்டவர்களின் வாழ்விலும் கல்வியிலும் தடைக்கற்களை எல்லாம் சுக்குநூறாக்கி ஒளியேற்றிட வைத்தவர் தான் இந்த மகாராஷ்டிர மாநிலத்து மைந்தன் ஜோதிமா புலே என்றும் அழைக்கப்பட்ட ஜோதிராவ் ஃபுலே. தீண்டாமை ஒழிப்பு, சாதி அமைப்பை ஒழித்தல் மற்றும் ஒடுக்கப்பட்ட சாதி மக்களுக்கு கல்வி கற்பித்தல் என இவரின் பணி அளப்பரியது. 


கிபி 1827ல் ஏப்ரல் 11ல் பூனே அருகிலுள்ள கிராமத்தில் மாலி சாதியை சேர்ந்த குடும்பத்தில் பிறந்தார். இவர்கள் பழம் மற்றும் காய்கறி விவசாயிகளாக இருந்தனர். இந்து தெய்வமான ஜோதிபாவின் பெயரால் ஜோதிபா புலே என்று பெயரிடப்பட்டார். பூலேவின் கொள்ளுதாத்தா கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்த காரணத்தால் சதாரா மாவட்டத்தில் உள்ள பூர்வீக கட்குன் கிராமத்தில் இருந்து குடும்பம் புனே மாவட்டத்தில் உள்ள கான்வாடிக்கு குடிபெயர்ந்தார். அங்கு இவரது தாத்தா பூ வேலைகள் செய்ய கற்றுக் கொண்டார். இதனால் கோர்ஹே என்ற பெயருக்கு பதிலாக பூலே (மலர் மனிதன்) என்ற பெயர் வந்தது. அரசவையில் சடங்குகள் மற்றும் விழாக்கள் ஆகியவற்றிற்கு இவர்களின் அலங்காரம் பேஷ்வாவை கவர்ந்ததால் இனாம் முறையில் 35 ஏக்கர் நிலத்தை வழங்கினார். ஜோதிராவின் பெரியப்பா சொத்தின் முழு கட்டுப்ப்ட்டையும் எடுத்துக்கொண்டு ஜோதிராவின் தந்தையை விவசாயம் மற்றும் பூ வேலையிலையே தொடர செய்தார். ஜோதிராவின் தந்தையான கோவிந்த்ராவ் சிம்னாபாயை திருமணம் செய்தார். அவருக்கு பிறந்த இரண்டு மகன்களில் ஜோதிராவ் இளையவர். தொடக்க பள்ளியில் படித்த பிறகு எண் கணிதம் அடிப்படைகளை கற்றுக்கொண்ட ஜோதிராவ் கடையிலும் பண்ணையிலும் வேலை செய்தார். இவரின் புத்திசாலித்தனத்தை கண்ட தந்தையின் நண்பர் இவரை ஸ்காட்டிஷ் மிஷன் உயர்நிலை பள்ளியில் இணைந்து ஆங்கில படிப்பை முடித்தார். இவரது 13வது வயதில் இவருக்கு திருமணம் முடிந்தது. கிபி 1848ல் பிராமண நண்பரின் திருமண ஊர்வலத்தில் கலந்து கொண்டபோது நண்பரின் பெற்றோர் உறவினர்களால் சூத்திர சாதியில் பிறந்தவர் விழாவில் கலந்து கொள்ளக்கூடாது என்று கண்டிக்கப்பட்டார். இவரை ஆழமாக பாதித்த இந்த நிகழ்வே சாதி அமைப்பில் உள்ள அநீதியை இவருக்கு புரிய வைத்தது. 


கிபி 1848ல் தனது மனைவியான சாவித்ரிபாய் புலேவுக்கு வாசிப்பு மற்றும் எழுத்துப் பயிற்சி அளித்தார். பின்னர் இருவரும் புனேவில் பெண்களுக்காக நடத்தப்படும் பள்ளியை ஆரம்பித்தனர். ஆனாலும் பழமைவாதிகள் அவருக்கு மிகுந்த தொல்லைகள் கொடுத்தனர். அவரது குடும்பத்தை ஒதுக்கி வைத்தனர். இந்த நேரத்தில் அவரது நண்பரான உஸ்மான் ஷேக் மற்றும் அவரது சகோதரி பாத்திமா ஷேக் இவர்களுக்கு தங்குமிடம் வழங்கினார். பள்ளியை தங்களது இடத்தில் தொடங்கவும் ஏற்பாடு செய்தார். பின்னர் தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்த குழந்தைகளுக்காக பள்ளியை துவங்கினார். கிபி 1852ல் 3 பள்ளிகள் இவரால் நடத்தப்பட்டது. சிப்பாய் புரட்சியின் போது ஐரோப்பிய நன்கொடைகள் நின்று போனதால் பள்ளிகள் மூடப்பட்டது. தீண்டத்தகாதவர்கள் செல்லும் பாதையில் அவர் சென்ற பிறகு துடைப்பம் எடுத்து அவர்களே துடைப்பதையும் இளம் விதவைகள் மொட்டையடித்து தங்களது வாழ்வை ஒதுங்கி வாழ்வதையும் கண்டார். விதவைகள் மறுமணத்தை ஆதரித்தார். கிபி 1863ல் புனேவில் காஷிபாய் என்ற பிராமண விதவை கர்ப்பமானாள். கருவை கலைக்க முயற்சித்தும் முடியாமல் குழந்தையை பெற்று அதை கிணற்றில் வீசி கொன்றார். இந்த செயல் கண்டுபிடிக்கப்பட்டு அவளுக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. இதனால் சிசுக்கொலையை தடுக்க அநாதை ஆஸ்ரமம் அமைத்தார். இந்த ஆஸ்ரமம் கிபி 1886 வரை தொடர்ந்து நடந்தது. ஆரியர்களுக்கு எதிராக அறைகூவல் விடுத்து பெண்கள், சூத்திரர்கள் மற்றும் தலித் ஆகியோரின் உரிமைக்காக கிபி 1873ல் சத்யசோதக் சமாஜத்தை நிறுவினார். கிபி 1876ல் பூனா நகராட்சிக்கு ஆணையராக நியமிக்கப்பட்டு கிபி 1883 வரை அந்த பதவியில் பணியாற்றினார். இவர் எண்ணற்ற படைப்புகளை எழுதியுள்ளார். அவற்றில் பிரம்மன்சா கசாப், போவாடா:சத்ரபதி சிவாஜிராவ் போன்ஸ்லே, குலாம்கிரி, இஷாரா ஆகியவை முக்கியமானவை. கிபி 1888 மே 1ல் பம்பாயைச் சேர்ந்த சமூக சீர்த்திராத்தவாதியான விதல்ராவ் கிருஷ்ணாஜி வந்தேகர் இவருக்கு "மகாத்மா" பட்டம் வழங்கினார். கிபி 1888ல் அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டு படுத்த படுக்கையானார். கிபி 1890ல் நவம்பர் 28ல் புனேவில் மறைந்தார். இந்திய தபால்துறை கிபி 1977ல் இவரது நினைவாக தபால்தலை வெளியிட்டு சிறப்பித்தது. இவரது செயல்களால் கவரப்பட்டு பி.ஆர்.அம்பேத்கார் தனது மானசீக ஆசானாக இவரை அங்கீகரித்தார். சரித்திரத்தில் மக்கள் மறையலாம். ஆனால் சிலர் ஏற்படுத்திய தாக்கம் அவ்வளவு சீக்கிரத்தில் மறையாது. அப்படிப்பட்ட ஒரு உன்னதமான ஆளூமை தான் மகாத்மா ஜோதிராவ் ஃபுலே அவர்கள்.

Comments